ஒரு பிரபல வார இதழில் வந்த ஒரு சிறுகதையை ஒரு வசதி கருதி சற்றே மாற்றி எழுதி இங்கே தந்திருக்கிறேன். இறுதியில் இந்த கதையை பற்றி ஒரு விளக்கத்தையும் தந்து இருக்கிறேன்.
" கேசவன் இன்று இன்டியானா ஜோன்ஸ் சினிமாவைப் பார்த்து விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இண்டர்நெட்டில் நேற்றே ஐநாக்ஸ் மல்டிஃப்லெக்ஸ்ல் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குச் சென்றான்.
''சார்! ஹாஃப் டே லீவு வேணும். என் வொய்ஃபுக்கு கால் ஃப்ராக்ச்சர் ஆகிவிட்ட்டது. செகண்ட் விசிட்டுக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும்!'' என்றான்.
அவனை சில விநாடி நேரம் உற்றுப் பார்த்த மேனேஜர், ''ஸாரி கேசவன், உங்க லீவை சாங்ஷன் பண்ண முடியாது! போய் உங்க வேலையைப் பாருங்க!'' என்றார்.
''ஏன் சார்?''
''நீங்க பொய் சொல்றீங்க! கொஞ்சம் முன்னாலதான் நீங்க இருக்கீங்களான்னு கேட்டு, உங்க வொய்ஃப் போன்ல பேசினாங்க. நீங்க லஞ்சுக்கு போயிருந்ததுனால நானே பேசுனேன். இந்தப் பக்கம் எதோ வேலை இருக்காம். முடிச்சிட்டு ஆபீஸ் வந்துடுறேன். கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னாங்க. நல்லா, தெளிவாதான் பேசினாங்க. அவங்க பேசினதை வெச்சுப் பார்க்கிறப்போ, அவங்களுக்கு கால் ஃப்ராக்ச்சர்னு நீங்க சொன்னது நம்புற மாதிரி இல்லே! இன்னொரு முறை இப்படிப் பொய் சொல்லாதீங்க. பொய்யர்களை எனக்கு அறவே பிடிக்காது!''
''ஸாரி சார்!'' என்ற கேசவன் திரும்பி நடந்தான். அறைக் கதவருகில் வந்து நின்றவன், மேனேஜரைப் பார்த்து, ''அப்படீன்னா, இந்த ஆபீஸ்ல ரெண்டு பேரை உங்களுக்குப் பிடிக்காதா சார்?'' என்றான்.
''ரெண்டு பேரா?''
''ஆமாம் சார், ரெண்டு பொய்யர்கள். ஒண்ணு நான்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே!''
சரி. இந்த கதையின் கருத்தை பற்றியோ அல்லது இதில் தவற விடப்பட்ட சில நியாயங்களைப் பற்றியோ நாம் விவாதிக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு மென்பொருள் அலுவலகத்திலும் நடக்கக் கூடிய ஒரு உரையாடல் தான் இது. இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சற்றே இதை திரும்பி பார்போம்.இந்தக் கதையில் மொத்தம் 35 ஆங்கில வார்த்தைகள். ஏறக்குறைய 22 விழுக்காடு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. அதற்காக இதன் ஆசிரியரையோ அல்லது இதை பிரசூரித்த வார இதழையோ நாம் குற்றம் கூற முடியாது. இதுவே இன்று எதார்த்தம். இதை முழுவதுமாக தமிழில் எழுதியிருந்தால் அது ஒரு கேலி கூத்தாகவே முடிந்து இருக்கும். நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு நிகழ்வாகவே இருந்து இருக்கும்.
என்னைப் பொருத்த வரை இது போன்ற தமிழ் கூட " எப்டி கீர " போல கொச்சை தமிழ் தான். சற்றே படித்தவர்கள் உபயோகிக்கும் கொச்சைத் தமிழ். நாம் எல்லோருமே பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் கொச்சைத் தமிழ். "இதை எப்படி தமிழில் பேச முடியும்? ஏன் தமிழில் பேச வேண்டும்? நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாய் " என சில நண்பர்கள் என்னை கேலி செய்ததுண்டு. ஆனால் இன்று சுத்தமாக ஆங்கிலமே படித்திராதவர்களுக்குக் கூட, சார், லீவு, ஃபுல், சினிமா, டிக்கெட் போன்றவை வழக்காடு சொற்களாகிவிட்டன. இன்றைய தலைமுறைக்கு சில வழக்காடு சொற்களுக்கு சரியான தமிழ் சொல் தெரியுமா என்பது கூட சந்தேகத்திற்குரிய ஒன்று.
இதே நிலை தொடர்ந்தால் நமக்கு பின் வரும் சந்ததியினர் பல தமிழ் சொற்களை பார்த்து கூட இருக்க மாட்டார்கள்.
இந்த நிலை தமிழ் மொழிக்கு மட்டுமே உரியது இல்லைதான். அனைத்து மொழிகளுமே காலப்போக்கில் சில மாற்றங்களை கண்டிப்பாக சந்தித்தே தீரும். இன்று பல்வேறு நாடுகளில் பேசப்படும் ஆங்கிலம் கூட அப்படி பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் அவை இது போல் பிற மொழி கலந்து மாற வேண்டுமா என்பது நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
இதை கண்டிப்பாக தடுக்க முடியும். தடுக்க வேண்டும். இல்லையேல் விளைவுகள் சற்று வருந்ததக்கதாகவே இருக்கும். உதாரணத்திற்கு பொன்னியின் செல்வனை படித்தவர்கள் அதன் முதல் அத்தியாயமான புது வெள்ளத்தை மிகவும் ரசித்து படித்திருப்பார்கள். அதில் கல்கி அவர்கள் தமிழ்நாட்டின் நீர் வளத்தை மிக அழகாக எழுதுயிருப்பார்கள். ஆனால் இன்று அது பலருக்கு புரியுமா என்பதே சந்தேகம்தான். அதே காட்சியை அடுத்த தலைமுறைக்கு புரியும்படி எழுதவேண்டும் என்றால்,
" வீராணம் டாமில் ரெண்டு சைடும் புல்லாக தண்ணி ஓடியது." " பெண்கள் ஜாலியாக போட்டிங் போய்கொண்டு இருந்தார்கள் " என்று எழுதினால் தான் புரியும் நிலை உருவாகிவிடும்.
நன்றி,
சரவணன்.
1 comment:
மிக அழகான பதிவு. புதிய கண்ணோட்டத்தில் இந்த கதையை தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.
ஜோசப்
Post a Comment