Saturday, July 19, 2008

கல்விக் கூட அவலங்கள்.

வணக்கம்.

" வயிற்றுக்கு சோற்றிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்.

பயிற்று பல கல்வி தந்து இந்த பாரினை உயர்த்திட வேண்டும். "


இது பாரதியார் பாடியது. இதை ஒரு கனவு, ஆசை என்பதை விட ஒரு கடமை என்றே பாடி இருக்கிறார். அதனால் தான் கல்வியை ஒரு சேவை என்றே பலரும் செய்து வந்து இருக்கிறார்கள்.

ஆனால் இன்று நிலைமையோ வேறு.

நான் சமீபத்தில் இந்தியா சென்று வந்திருந்தேன். ஜூன் மாதம் என்பதால் பலரும் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைகளில் சற்று மும்முரமாக இருந்தார்கள். அதில் என் நண்பன் தன் மூன்று வயது மகனுக்கு ஒரு பிரபல பள்ளியில் சேர்க்கை கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டான். அந்தப் பள்ளியில் கேட்கும் தகுதிகள் சற்று அளவுக்கு மீறியதாக எனக்குத் தெரிந்தது. அவன் கூறிய கட்டணமோ என் தலையையே சுற்றியது. இன்றைய சூழ்நிலையில் தரமான கல்வியை தருவதற்கு பெரும் பொருள் செலவழிக்க வேண்டும் என்பது சத்தியமான உண்மை.

இன்று கல்வி பெரிதும் வருமானம் ஈட்டக் கூடிய ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. முன்பு கல்விச் சேவை செய்து கொண்டு இருந்த பெரும் தொண்டு நிறுவனங்கள் இன்று காணாமல் போய் விட்டன. முன்பு கல்விக்கூடங்களை அரசாங்கமும், கள்ளுக் கடைகளை தனியாரும் நடத்தி வந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. சில தனியாரோ கல்வியை ஒரு தொழிலாக மாற்றிவிட்டனர்.

இன்று நம்மிடையே வாழும் பெரும் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம். ஆனால் இன்று அரசுப் பள்ளிகளின் நிலைமை பெரும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆராய்ச்சிக்கூடம் போன்ற சரியான வசதிகள் செய்து கொடுக்கப் படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் போதுமான் ஆசிரியர்கள் கூட அமர்த்தப்படுவதில்லை. அப்படி தவறி சில பள்ளிகளில் இருந்தால் கூட சில தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது. நகரங்களில் மட்டுமே பெரிதும் இருந்து வந்த இந்த எண்ணம் இன்று மெதுவாக கிராமங்களிலும் தொற்றிக்கொண்டு வருகிறது.
இந்த அவல நிலையை இன்று சில சுயநலவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தரமானக் கல்வியை இன்று பல குடும்பங்களுக்கு எட்டாக் கணியாக்கி விட்டனர். இந்த சூழ்நிலையில் நாம் அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பளிக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறோம். இன்று பணம் படைத்தவர்கள் மட்டுமே நல்ல கல்வியை பெற முடியும்.


இது கல்வியை மட்டும் அல்ல விளையாட்டையும் சேர்த்தே பாதிக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டும் கல்விக் கூடங்களில் தான் தொடங்குகிறது. வேறு சில முன்னேறிய நாடுகள் போல் இங்கு தனி விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு நம் பெற்றோர்களிடையே வரவேற்பு இருப்பதில்லை. நம்மில் பலரும் விளையாட்டை ஒரு கல்வி சார்ந்த (Extra-Curricular) அம்சமாகவே பாவித்து வருகிறோம். எனவே இன்று பல திறமையாளர்களை கண்டெடுக்கும் முக்கிய கடமையும் நம் பள்ளிக் கூட்டங்களுக்கு உண்டு. ஆனால் சரியான பயிற்சி வசதிகள் இல்லாமல் எந்தப் பள்ளியாலும் அதை செய்ய முடியாது. உதாரணத்திற்கு எந்த அரசுப் பள்ளிகளிலும் நீச்சல் குளம் இருப்பதில்லை. ஒரு கிராமத்தில் ஒரு மீனவ சிறுவனுக்கு நன்றாக நீந்த தெரிந்தாலும் அதை மெருகேற்றி அவனை ஒரு பெல்ப்ஸ் ஆக மாற்ற இன்று எந்த பள்ளியிலும் வசதிகள் இல்லை. அதற்கு அந்த சிறுவன் நகரங்களில் சில விலை உயர்ந்த பள்ளிக்கூடங்களில் படித்தாக வேண்டும். கல்வியைப் போல் விளையாட்டையும் இன்று சில பணக்காரர்கள் மட்டுமே பயில முடியும். இந்த நிலையில் " நூறு கோடி மக்களுக்கு ஒரு தங்கமா" என்று நம்மில் சிலர் வருத்தபடுவது அர்த்தமற்றது. ஏனெனில் இன்றைய போட்டி அபினவ் போன்ற சில பணக்கார பிள்ளைகளுக்கு மத்தியில் தான்.

அதற்காக அபினவ் என்ற அந்த இளைஞனின் கடும் முயற்சியையும், மன திடத்தையும் யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவை ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இடம்பெற செய்தது நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டிய ஒன்று. அதே சமயம், இன்று அபினவ் போல் திறமையும், ஆர்வமும், உழைப்பும் தர பலர் தயாராக இருந்தாலும், அனைவருக்கும் பொருள் வசதி இருப்பதில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். இது மாறியாக வேண்டும். மாற்றியாக வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனை ஒலிம்பிக் போட்டியானாலும் இதே நிலைதான் தொடரும். ஏனெனில் இன்று இந்தியாவில் சில பள்ளிகளில் கேட்பது போல், நோபல் பரிசுகளும். ஒலிம்பிக் தங்க பதக்கங்களும் யாரும் நன்கொடை வாங்கிக் கொண்டு தருவது இல்லை.

நன்றி,

சரவணன்.

Saturday, June 7, 2008

தமிழ் சிறுகதை

ரு பிரபல வார இதழில் வந்த ஒரு சிறுகதையை ஒரு வசதி கருதி சற்றே மாற்றி எழுதி இங்கே தந்திருக்கிறேன். இறுதியில் இந்த கதையை பற்றி ஒரு விளக்கத்தையும் தந்து இருக்கிறேன்.

" கேசவன் இன்று இன்டியானா ஜோன்ஸ் சினிமாவைப் பார்த்து விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இண்டர்நெட்டில் நேற்றே ஐநாக்ஸ் மல்டிஃப்லெக்ஸ்ல் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குச் சென்றான்.

''சார்! ஹாஃப் டே லீவு வேணும். என் வொய்ஃபுக்கு கால் ஃப்ராக்ச்சர் ஆகிவிட்ட்டது. செகண்ட் விசிட்டுக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும்!'' என்றான்.

அவனை சில விநாடி நேரம் உற்றுப் பார்த்த மேனேஜர், ''ஸாரி கேசவன், உங்க லீவை சாங்ஷன் பண்ண முடியாது! போய் உங்க வேலையைப் பாருங்க!'' என்றார்.

''ஏன் சார்?''

''நீங்க பொய் சொல்றீங்க! கொஞ்சம் முன்னாலதான் நீங்க இருக்கீங்களான்னு கேட்டு, உங்க வொய்ஃப் போன்ல பேசினாங்க. நீங்க லஞ்சுக்கு போயிருந்ததுனால நானே பேசுனேன். இந்தப் பக்கம் எதோ வேலை இருக்காம். முடிச்சிட்டு ஆபீஸ் வந்துடுறேன். கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னாங்க. நல்லா, தெளிவாதான் பேசினாங்க. அவங்க பேசினதை வெச்சுப் பார்க்கிறப்போ, அவங்களுக்கு கால் ஃப்ராக்ச்சர்னு நீங்க சொன்னது நம்புற மாதிரி இல்லே! இன்னொரு முறை இப்படிப் பொய் சொல்லாதீங்க. பொய்யர்களை எனக்கு அறவே பிடிக்காது!''

''ஸாரி சார்!'' என்ற கேசவன் திரும்பி நடந்தான். அறைக் கதவருகில் வந்து நின்றவன், மேனேஜரைப் பார்த்து, ''அப்படீன்னா, இந்த ஆபீஸ்ல ரெண்டு பேரை உங்களுக்குப் பிடிக்காதா சார்?'' என்றான்.

''ரெண்டு பேரா?''

''ஆமாம் சார், ரெண்டு பொய்யர்கள். ஒண்ணு நான்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே!''

சரி. இந்த கதையின் கருத்தை பற்றியோ அல்லது இதில் தவற விடப்பட்ட சில நியாயங்களைப் பற்றியோ நாம் விவாதிக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு மென்பொருள் அலுவலகத்திலும் நடக்கக் கூடிய ஒரு உரையாடல் தான் இது. இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சற்றே இதை திரும்பி பார்போம்.

இந்தக் கதையில் மொத்தம் 35 ஆங்கில வார்த்தைகள். ஏறக்குறைய 22 விழுக்காடு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. அதற்காக இதன் ஆசிரியரையோ அல்லது இதை பிரசூரித்த வார இதழையோ நாம் குற்றம் கூற முடியாது. இதுவே இன்று எதார்த்தம். இதை முழுவதுமாக தமிழில் எழுதியிருந்தால் அது ஒரு கேலி கூத்தாகவே முடிந்து இருக்கும். நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு நிகழ்வாகவே இருந்து இருக்கும்.

என்னைப் பொருத்த வரை இது போன்ற தமிழ் கூட " எப்டி கீர " போல கொச்சை தமிழ் தான். சற்றே படித்தவர்கள் உபயோகிக்கும் கொச்சைத் தமிழ். நாம் எல்லோருமே பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் கொச்சைத் தமிழ். "இதை எப்படி தமிழில் பேச முடியும்? ஏன் தமிழில் பேச வேண்டும்? நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாய் " என சில நண்பர்கள் என்னை கேலி செய்ததுண்டு. ஆனால் இன்று சுத்தமாக ஆங்கிலமே படித்திராதவர்களுக்குக் கூட, சார், லீவு, ஃபுல், சினிமா, டிக்கெட் போன்றவை வழக்காடு சொற்களாகிவிட்டன. இன்றைய தலைமுறைக்கு சில வழக்காடு சொற்களுக்கு சரியான தமிழ் சொல் தெரியுமா என்பது கூட சந்தேகத்திற்குரிய ஒன்று.
இதே நிலை தொடர்ந்தால் நமக்கு பின் வரும் சந்ததியினர் பல தமிழ் சொற்களை பார்த்து கூட இருக்க மாட்டார்கள்.

இந்த நிலை தமிழ் மொழிக்கு மட்டுமே உரியது இல்லைதான். அனைத்து மொழிகளுமே காலப்போக்கில் சில மாற்றங்களை கண்டிப்பாக சந்தித்தே தீரும். இன்று பல்வேறு நாடுகளில் பேசப்படும் ஆங்கிலம் கூட அப்படி பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் அவை இது போல் பிற மொழி கலந்து மாற வேண்டுமா என்பது நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.

இதை கண்டிப்பாக தடுக்க முடியும். தடுக்க வேண்டும். இல்லையேல் விளைவுகள் சற்று வருந்ததக்கதாகவே இருக்கும். உதாரணத்திற்கு பொன்னியின் செல்வனை படித்தவர்கள் அதன் முதல் அத்தியாயமான புது வெள்ளத்தை மிகவும் ரசித்து படித்திருப்பார்கள். அதில் கல்கி அவர்கள் தமிழ்நாட்டின் நீர் வளத்தை மிக அழகாக எழுதுயிருப்பார்கள். ஆனால் இன்று அது பலருக்கு புரியுமா என்பதே சந்தேகம்தான். அதே காட்சியை அடுத்த தலைமுறைக்கு புரியும்படி எழுதவேண்டும் என்றால்,

" வீராணம் டாமில் ரெண்டு சைடும் புல்லாக தண்ணி ஓடியது." " பெண்கள் ஜாலியாக போட்டிங் போய்கொண்டு இருந்தார்கள் " என்று எழுதினால் தான் புரியும் நிலை உருவாகிவிடும்.

நன்றி,

சரவணன்.

Monday, May 5, 2008

கட்டாயத் தமிழ்

மீபத்தில் ஒரு வார இதழில் நான் படித்த செய்தி சற்று அதிர்ச்சியாக இருந்தது. மதுரை அருகே பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தமிழ் படிக்க தெரியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி தான் அது. அந்த மாணவனின் புத்திசாலித்தனத்தையும் அறிவுத் திறமையையும் இங்கு நாம் விவாதிக்க வேண்டாம். ஆனால் தன் தாய் மொழியையே படிக்க திணறிய அவலம் தான் இங்கே நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது. அதே வார இதழில் மற்றொரு பக்கத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக சேர்த்தது பற்றியும் படிக்க நேர்ந்தது. இந்தச் செய்தியை பற்றி சில எண்ணங்கள் தான் இந்த பதிவு.

ஏன் இந்த கட்டாய தமிழ் பாடம் என்று யோசித்து பார்த்த பொழுது என் நெருங்கிய நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது நினைவிற்கு வந்தது. அனைவருமே தமிழர்கள் தான். நல்ல திறமையான புத்திசாலிகளும் கூட. அதில் ஒருவர் பாரதியாருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினர் என்பது இன்னும் வேதனைக்குரிய விஷயம். ஏன் இந்த நிலை என்ற ஆராய்ந்து பார்த்தால் பலரும் பல காரணங்களை கூறுகின்றனர்.

ஒரு சிலர் தமிழ் தான் வீட்டில் பேசுகிறோமே அதனால் வேறு மொழி படித்தால் கூடுதல் தகுதி என்று கூறுகின்றனர். தாய்மொழி என்பது ஒருவர் மற்றொருவருக்கு தான் நினைப்பதை தெரிவிக்க உதவும் ஒரு கருத்து பரிமாற்ற கருவி மட்டும் அல்ல. அது நம் கலாச்சாரத்துடன் கலந்துவிட்ட ஒரு உணர்வு. அது ஒரு வாழ்க்கை நெறி. தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தாம் கண்டறிந்ததை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் ஒரு களஞ்சியம். அதை மறந்து தான் இன்று பலரும் தமிழை தவிர்த்து வேறு மொழிகளை பாடமாக படித்து வருகிறார்கள்.

இன்னும் சிலரோ பள்ளியில் மொழிப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக என்று காரணம் சொல்லுகின்றனர். மற்றும் தமிழில் படித்தால் பல துறைகளை சரிவர புரிந்து கொள்ள முடியாது, மேற் படிப்புகளில் சிரமப் பட வேண்டியிருக்கும் என்கிற வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்தியாவிற்கு அனுவிஞ்ஞானியை தந்தது தமிழ் வழிகல்விதான். இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசரை தந்தது தாய்மொழி கல்விதான்.

தமிழை சரிவர படிக்கத் தவறிய தமிழர்கள் அனைவருமே எதோ ஒரு போலியான காரணத்தைக் காட்டி தத்தம் கடமையை செய்யத் தவறியவர்களே!! அவர்கள் அனைவரும் பாரதியாரை ரசிக்க முடியாத, பொன்னியின் செல்வனை அனுபவிக்க முடியாத, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று யாரையுமே புரிந்து மகிழ முடியாத துரதிர்ஷ்டசாளிகளே!!!

ஆனால் ஏனோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் தமிழ் மொழிப்பற்று ஹிந்தி எதிர்ப்பாகவே பார்க்கப் படுகிறது. அதனால் நான் திராவிடக் கட்சிகளைப் போல் ஹிந்தியை எதிர்க்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தமிழ் படிக்கத் தவறியதைப் போல் நான் ஹிந்தியை படிக்கத் தவறியவன். பல நாடுகளில் சுற்றி திரிபவன் என்பதால் இதன் இழப்பை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை அயல் நாடுகளில் இந்தியர்கள் என்னை இந்தியன் என்றறிந்து ஹிந்தியில் பேச முயலும்போது, “ எனக்கு ஹிந்தி தெரியாது “ என்று பல முறை ஒரு வித சங்கடத்துடனே கூறி இருக்கிறேன். உடன் அவர்கள் " ஓ தமிழ்நாடா " என்று கேட்கும் பொழுது அது ஒரு பெருமையாக எனக்குத் தோன்றியதில்லை.

ஆயினும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்னைப் பொறுத்தவரை தவறாக புரிந்து கொள்ளப் பட்டு இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் நடந்தது ஹிந்தி மொழி எதிர்ப்பு அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை தான் எதிர்த்தனர். இன்றும் தமிழ்நாட்டில் ஹிந்தி பலரால் பாடமாக படிக்கப் பட்டு வருகிறது. ஹிந்தி பிரச்சார சபா இன்றளவிலும் தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் 1960 களின் காலகட்டத்தில், வேறு மொழி பேசும் மக்களை அறவே மறந்து பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்ற காரணத்தை சொல்லி, ஹிந்தியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்க சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தால் ஏற்பட்ட ஒரு கசப்பின் விளைவுதான் அன்றைய கடுமையான எதிர்ப்பு. அப்படி ஒரு கசப்புணர்ச்சியில் அண்ணா அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய "அதிகம் பேசப்படும் மொழி என்பதால் ஹிந்தி அலுவல் மொழி என்றால் இந்தியாவில் அதிகம் இருக்கும் எலியை விட்டு ஏன் நாம் புலியை தேசிய மிருகம் என்று அறிவித்தோம்" போன்ற கேள்விகள் தவறாகத் தோன்றவில்லை.

அதே நேரத்தில் அந்த எதிர்ப்பை முழுவதும் தவறு என்றும் நாம் கூற முடியாது. பக்கத்து மாநிலங்களைப் பார்க்கும் பொழுது மத்திய அரசு 1960 களில் கூறியது போல் நாம் முழுமையாக ஹிந்தியை ஒத்துக்கொண்டு இருந்தோமானால் இன்றைய பெங்களூர், ஹைதராபாத் நிலை தான் சென்னைக்கும் வந்து இருக்கும். என் கன்னட நண்பன் ஒருவன் ஒவ்வொரு முறை சென்னை - பெங்களூர் இரயிலைவிட்டு பெங்களூரில் இறங்கும் போது முதலில் அவனிடம் பேசப்படும் மொழி ஹிந்தி, பின்பு தமிழ், பின்பு ஆங்கிலம், கடைசியாகவே கன்னடத்தில் பேசுகிறார்கள். ஹைதராபாத்திலும் இதே நிலை தான். இந்த நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லாததற்கு அந்த எதிர்ப்பு ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இந்த எதிர்ப்பு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதும், தமிழ் மக்களை ஹிந்தி எதிர்ப்பாளர்கள் என சித்தரித்ததும் தான் துரதிர்ஷ்டவசமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் மாநில மொழி என்கிற அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் சமயத்தில் ஹிந்தியையும் தேசிய மொழி என்ற வகையில் ஒரு மூன்றாம் நிலை மொழிப் பாடமாக அறிவுருத்துவதில் தவறேதும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இந்த தமிழ் கட்டாய பாடத்தை பலரும் இன்று எதிர்க்கின்றனர். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதாக கேலி செய்கின்றனர். ஆனால் அந்த குண்டுச் சட்டி மட்டுமே நமக்கு சொந்தமான ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது. நமக்கு சொந்தமானதை நாமே பயன் படுத்தாமல் பரண் மீது வைத்துவிட்டால் அது மொத்தமாக காணாமல் போய்விடக் கூடும். பின்பு அதை நாம் எங்கோ ஒரு அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க முடியும். அது போல் நடக்காமல் இருக்க இன்னொரு மொழிப் போர் தேவைப்படாது, இந்த அரசாணை மட்டுமே போதும் என்றே நம்புவோம்.

நன்றி

மு. சரவணன்.

Tuesday, April 29, 2008

புகையும் பூசல்

நெருப்பில்லாமல் இது நாள் வரை புகைந்து வந்த பாறைகள் சமீபத்தில் இரு மாநிலங்களிலும் நெருப்பை மூட்டியுள்ளன. இந்தப் பிரச்சனை புதிதாக முளைத்தது அல்ல. காவேரி என்னும் ஒரு பழைய யுத்தத்தில் ஒகேநேக்கல் குடிநீர் திட்ட மறுப்பு ஒரு புதிய களம். 1950 முதலே தொடங்கிவிட்ட உரிமை பிரச்சனை.

இந்திய வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் இதன் அவலம் புரியும். இந்தியா குடியரசு ஆவதற்கு முன்பு அதன் வரை படம் வேறு விதமாகத்தான் இருந்தது. தென் இந்தியாவை பொறுத்த மட்டில் மைசூர், மதராஸ், மலபார் என்று ஆங்கிலேயரும் வேறு சில அரச குடும்பத்தினரும் தங்கள் எல்லைகளை வகுத்து இருந்தனர். அப்பொழுது சேலம், உதகைமண்டலம், ஒகேநேக்கல் என சிலப் பகுதிகள் மைசூர் மாகாணத்திடம் இருந்து வந்தது. ஆனால் 1950 உடன்படிக்கையின் படி இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த பொழுது இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப் பட்டன. அந்த உடன்படிக்கையின் பொழுது தமிழ்நாடு அடைந்ததை விட இழந்ததே அதிகம். ஆனால் ஒரு எல்லை ஒழுங்குக்காகவும் சில அரசாங்க வசதிகளுக்காகவும் இப்படி பல மாநிலங்களில் நடந்தது. அப்பொழுதிலிருந்தே கர்நாடகம் ஒகேநேக்கல்லை தன் எல்லைக்குள் சேர்க்கும் எண்ணத்திலேயே தொடர்ந்து இருந்து வந்தது. அந்த எண்ணத்தின் ஒரு வளர்ந்த வெளிப்பாடுதான் இந்தப் பிரச்சனை.

ஆனால் அதே கர்நாடகம் மகாராஷ்டிர எல்லையில் உள்ள, முழுவதுமே மராத்தியே பேசிக்கொண்டிருக்கும் மக்கள் வசிக்கும் பெல்காமை மகராஷ்டிரத்திடம் தரத் தயாராக இல்லை. வருடத்தில் பத்து நாள் தன் சட்டசபையை பெல்காமில் கூட்டி தன் உரிமையை உறுதிப்படுத்தி வருகின்றனர். கர்நாடகத்தின் இந்த இரட்டை தனம் வன்மையாகக் கண்டிக்க வேண்டிய ஒன்று.

இந்த 58 வருட வரலாற்றை மறந்தாலும் சமீபத்தில் 1998ல் இரு மாநிலமும் குடிநீர் திட்டங்களை வகுத்த போதே இரு மாநில முதல்வர்களாலும் ஆட்சேபனை ஏதுமின்றி முடிவான திட்டம் தான் இந்த ஒகேநேக்கல் குடிநீர் திட்டம். அந்தத் திட்டத்தை இப்பொழுது கர்நாடகம் மறுப்பது ஒரு துரோகச் செயல்.

ஒகேநேக்கல்லில் உரிமை கொண்டாட கர்நாடகம் கூறும் மற்றுமொரு காரணம் அதன் பெயர் கன்னடத்தில் இருப்பதாகும். பெங்களுரு சென்ற நண்பர்கள் அங்கு கண்டோன்மென்ட் என ஒரு பகுதி இருப்பதை பார்த்து இருப்பார்கள். அது ஆங்கிலப் பெயராக இருப்பதனால் மட்டுமே அதை இங்கிலாந்து கேட்டால் கர்நாடகம் அதை கொடுக்க முன்வரமுடியுமா? அதை ஒரு காரணமாகக் கூறுவதே ஒரு முதிர்ச்சியற்ற செயல். குழந்தைத்தனமான வாதம்.

எது எப்படி இருந்தாலும், இது இன்று பெரிதாக வெடித்துவிட்டது. பலரும் பல விதமாக கண்டித்து இருக்கிறார்கள். சிலர் மென்மையாக, சிலர் வன்மையாக. யார் செய்தது சரி என்று விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் நம் எதிர்ப்பை அனைவரும் ஒற்றுமையாக தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியான ஒரு செயலே. தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும் என்பதைப் போல் நெடுங்காலமாக காவேரிப் பிரச்சனையில் பொறுமை காத்து வந்த தமிழ் மக்கள் இதில் இன்று தூண்டப்பட்டிருக்கிறார்கள். எனக்கும் இந்த பிரிவுனை, வகுப்புவாதம் என்பதில் எல்லாம் உடன்பாடில்லை. ஆனால் செவிடர்களுக்கு எட்ட வேண்டுமென்றால் சற்று உரக்கப் பேசியாக வேண்டும். அப்படி இன்று நாம் உரக்கப் பேசியது தான் இந்த எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு இன்றளவில் ஒரு எழுச்சியே. கர்நாடகம் போல் வன்முறை ஏதும் இல்லாமல் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே இந்த எழுச்சி அரங்கேறியுள்ளது. ஆனால் இன்னமும் கர்நாடகமும் தில்லியும் செவிடர்களாகவே இருக்கும் பட்சத்தில் இது அமைதியாகவே தொடருமா என்று உறுதி கூற முடியாது.

நாம் அனைவருமே தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி பேசும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வும், கொஞ்சமேனும் மனித நேயமும் நம் மக்களுக்கும், முக்கியமாக நம் அரசியல்வாதிகளுக்கும் வந்து விட்டால் இது போன்ற வெறுக்க தக்க விளைவுகள் தடுக்கப் படலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதை நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதுவரை நாம் பொறுமையையும் நம் உரிமையையும் ஒரு சேரக் காத்து நிற்போம்.

நன்றி,
சரவணன்.

Tuesday, April 22, 2008

வணக்கம்

வணக்கம்!!

இதோ தமிழ் புத்தாண்டில் தொட்டு தொடங்கி விட்டது என் வலை பதிவு. நிரம்ப படிக்கக் கூடியவன் என்ற ஒன்றையே தகுதியென நினைத்து தொடங்கி விட்டேன். இங்கே என் கருத்துக்கள், கனவுகள், கோபங்கள், ஆசைகள், அழுகைகள் என அனைத்தையும் பதிவு செய்வதாக உத்தேசம்.

நான் தொடங்குவதற்கு முன் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். ஏன் இந்த முயற்சி? எதற்காக இந்த பதிவு? சிறு வயது ஆசையா? ஊடக ஆர்வமா? பொழுது போக்கவா? அங்கீகாரத் தேடலா? அல்லது ஆத்மார்த்தமான தேடலா? எழுத்தாளனாக முயற்சியா? சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்புகிறேனா? எனக்கும் எழுத தெரியும் என என் நண்பர்களுக்கு சொல்லத் துடிக்கும் ஆணவமா?
எனக்குத் தெரியவில்லை.

தமிழில் எழுதியே பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழில் சிந்திக்கக் கூட முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு அச்சம் என்னுள் வரத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தை உங்களை போன்ற சக வலைப் பதிவாளர்களின் விமர்சனங்களின் மூலம் களைந்தெறிய நான் எடுக்கும் ஒரு சுயநல முயற்சி. அவ்வளவே!!! மற்றபடி இந்தப் பதிவு ஒரு தனி மனித உணர்ச்சிகளின் வடிகாலாக மட்டும் இல்லாமல், வேறு சிலரின் உணர்ச்சிகளை சிறிதேனும் வருடிச் செல்ல முயலுமாயின் மகிழ்ச்சி.

செம்புனல் என்றால் புது மழை நீர் என்று ஒரு பொருள் உண்டு. அது என்றும் கலங்கி இருப்பது போல் இதில் சிற்சில பிழை இருப்பின் அதை பொறுத்து, திருத்த வேண்டுகிறேன்.

தினம் எழுதுவதற்கு நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. தினம் எழுதத் தெம்பில்லாமல் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையேனும் எழுதலாம் என்று எண்ணி இருக்கிறேன். இத்துணை பெரிய ஒரு வாய்ப்பை மிக எளிதாக்கிய தொழில்நுட்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, நீங்கள் நிச்சயம் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ என் வலை பதிவு தங்கள் விமர்சனத்துக்காக.

நன்றி.
சரவணன்.

என்னைப் பற்றி ...

பெயர் - மு சரவணன்
வயது - 29
படித்தது - இயந்திரப் பொறியியல்.
வேலை - மென்பொருள்
வசிப்பது - நியூயார்க் நகரம்
சொந்த ஊர் - சென்னை, மயிலாடுதுறை.